புதன், நவம்பர் 02, 2011

ஒரு பணியிடத்திற்கு இருவர் நியமனம் : பள்ளி கல்வித் துறை குளறுபடி

காரைக்குடி : ஒரே பள்ளிக்கு, இரண்டு தமிழாசிரியைகளுக்கு பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டதால், யார் பணி ஏற்பது என்ற குளறுபடி ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகப்பட்டியில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, தமிழாசிரியை பணிக்கு, 2010ம் ஆண்டு ஆக., 30ம் தேதி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஆசிரியை ராதாவுக்கு, பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. அப்போது, உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இவர் பணி நியமனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில், இதே பள்ளிக்கு, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், தமிழாசிரியை பணிக்கு 2010ம் ஆண்டு செப். 18ம் தேதி மீனாள் என்பவர் நேரடியாக நியமனம் செய்ய உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் முடிந்து இருவரும் ஒரே பணியிடத்திற்குச் சென்றதால், குளறுபடி ஏற்பட்டது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறியதாவது: இருவரையும் அழைத்து சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினேன். ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டேன். இருவரும் முரண்டு பிடிக்கின்றனர். நேரடி நியமனத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால், இப்பிரச்னை எழுந்துள்ளது. விரைவில், இருவரில் ஒருவரை பணி மாறுதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.